விமானப்படை தாக்குதலுக்கும், தேர்தலுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது - நிர்மலா சீதாராமன்
விமானப்படை தாக்குதலுக்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்திய விமானப்படை பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 250-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் விமானப்படையின் தரப்பில் எந்தஒரு எண்ணிக்கையும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பா.ஜனதாவின் தரப்பில் பயங்கரவாதிகள் பலி எண்ணிக்கை தொடர்பாக பல்வேறு தகவல் பரப்பப்படுகிறது. புல்வாமா தாக்குதல், இந்திய விமானப்படையின் பதிலடியை பா.ஜனதா அரசியலாக்குகிறது என காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது. சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலி எண்ணிக்கை தொடர்பாக கேள்வியை எழுப்புகிறார்கள்.
இந்நிலையில் எண்ணிக்கை தொடர்பாக மவுனம் கலைத்த ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோக்லே வெளியிட்டுள்ள அறிவிப்பிலே அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது என்றார். “இது ராணுவ நடவடிக்கை கிடையாது” இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாகும் என்று வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை குறிப்பிட்டு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
தேர்தல் வரவுள்ள நிலையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையா? என்ற கேள்வியும் சிலர் எழுப்புகிறார்கள். இந்நிலையில் சீதாராமன் கொடுத்துள்ள பதிலில், “இந்திய விமானப்படையின் தாக்குதல் மற்றும் தேர்தலுக்கு இடையே எந்தஒரு தொடர்பும் கிடையாது. இந்திய உளவுத்துறை பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் தொடர்பாக அளித்த தகவலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இது ராணுவ நடவடிக்கை கிடையாது” என குறிப்பிட்டார்.