உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் 3 கின்னஸ் சாதனைகள்
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் 3 கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
பிரயாக்ராஜ்,
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 3 நதிகள் சங்கமத்தில் உலக புகழ்பெற்ற கும்பமேளா நிகழ்ச்சி மகரசங்கராந்தி தினமான ஜனவரி 15ந்தேதி தொடங்கியது. மகாசிவராத்திரியான இன்று 6வது முக்கிய புனிதநீராடலுடன் இந்த நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது. இதுவரை 22 கோடி பக்தர்கள் நதிகள் சங்கமத்தில் புனிதநீராடியுள்ளனர்.
இதற்கிடையே கும்பமேளா நிகழ்ச்சியில் 3 கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதிகமான போக்குவரத்து மற்றும் கூட்டம் மேலாண்மை, மிகப்பெரிய ஓவியப்போட்டி, மிகப்பெரிய துப்புரவு மற்றும் கழிவு அகற்றும் திட்டம் ஆகிய மூன்றிலும் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மாநில கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்காக கின்னஸ் உலக சாதனை குழுவில் உள்ள 3 உறுப்பினர்கள் கடந்த 28ந்தேதியில் இருந்து நேற்று வரை அங்கு ஆய்வில் ஈடுபட்டனர். 28ந்தேதி நெரிசலில் சிக்கிய 503 பஸ்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டு சென்றன. 1ந்தேதி நடந்த இயற்கை காட்சி ஓவியப்போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். 10 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டது ஆகிய மூன்றும் உலக சாதனைக்கு காரணமாக அமைந்தன.