இந்தியாவில் பல்வேறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழப்பு?
இந்தியாவில் பல்வேறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்தான் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
2001-ல் இந்திய பாராளுமன்ற தாக்குதல் முதல் சமீபத்திய புல்வாமா தாக்குதல் வரையில் இந்தியாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தால் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து இப்போது தாக்குதல் நடத்தும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார். இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் எல்லாவற்றுக்கும் மூளையாக செயல்பட்டவன் மசூத் அசார். 2002-ம் ஆண்டில் இந்த இயக்கம் தடை செய்யப்பட்டாலும் பாகிஸ்தானில் செயல்பட்டுதான் வருகிறது.
பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியை பாகிஸ்தான் நட்பு நாடான சீனா தடுத்தது. புல்வாமா தாக்குதலை அடுத்தும் மசூத் அசாருக்கு தடை விதிக்கும் வகையில் பிரான்ஸ் ஐ.நா. நடவடிக்கை எடுக்கிறது. இதற்கிடையே ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் இருக்கும் தொடர்பை பாகிஸ்தான் உறுதி செய்தது. அந்நாட்டு மந்திரி, ஜெய்ஷ் அமைப்பிடம் கேட்டோம், ஆனால் புல்வாமா தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை என கூறிவிட்டது என கூறினார். அசாருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதற்கிடையே இந்திய விமானப்படை பலாகோட்டில் தாக்குதல் நடத்தியது உண்மைதான் என ஜெய்ஷ் இ முகமது இயக்கம் அறிவித்தது.
இப்போது பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்துவிட்டான் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் மசூத் அசார் காயம் அடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டான் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை.