அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது - டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டினார்.

Update: 2019-03-03 05:21 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் புறநகர் பகுதியான மேரிலேண்டில் கன்சர்வேடிவ் கட்சியின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்துகொண்டு 2 மணி நேரம் பேசினார். இதுதான் அவர் ஜனாதிபதி பதவிக்காலத்தில் பேசிய அதிக நீண்ட உரையாகும்.

இதில் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பது குறித்தும் அவர் பேசினார். அதன் விவரம் வருமாறு:-

இந்தியா அதிக வரி விதிக்கும் நாடாக இருக்கிறது. அவர்கள் நமது பொருட்களுக்கு நம்மிடம் அதிக வரி வசூலிக்கிறார்கள். உதாரணத்துக்கு நாம் ஹார்ட்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிளை இந்தியாவுக்கு அனுப்பினால், அவர்கள் 100 சதவீதம் வரி விதிக்கிறார்கள். ஆனால் இந்தியா ஒரு மோட்டார் சைக்கிளை அமெரிக்காவுக்கு அனுப்பினால், நாம் புத்திசாலித்தனமாக அவர்களிடம் வரி எதுவும் வசூலிப்பதில்லை.

எனவே நான் அதற்கு எதிராக ஒரு பதில் வரி அல்லது ஒரு குறைந்தபட்ச வரி விதிக்கலாம் என கருதுகிறேன். ஒரு வரி விதிக்க வேண்டும், அதனை கண்ணாடி வரி என்றும் கூறலாம்.

இந்தியா மோட்டார் சைக்கிளுக்கு விதித்த 100 சதவீத வரியை 50 சதவீதமாக குறைத்துள்ளது. நான் அவர்களுடன் 2 நிமிடம் பேசியதில் இந்த வரி குறைக்கப்பட்டது. இதை சரி என்று கருதினாலும், இது போதுமானதல்ல. ஒரு உதாரணத்துக்கு தான் இந்தியாவை கூறினேன்.

இந்தியா போலவே மற்ற சில நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கிறார்கள். இது பதில் வரி விதிப்பதற்கான நமக்கான நேரம்.

ஆனாலும் இந்தியா மிக அதிக வரி வசூலிக்கும் நாடு. அவர்கள் வியக்கத்தக்க வகையில் வரி வசூலிக்கிறார்கள். அவர்கள் 100 சதவீதம் வரி வசூலிக்கிறார்கள். ஆனால் நாம் 100 சதவீதம் வரி வசூலிக்கப்போவது இல்லை. நான் 25 சதவீதம் வரி வசூலிக்கப்போகிறேன். 25 சதவீதம் மட்டுமே வசூலிப்பதால் இதனை செனட்டில் எனது ஆதரவாளர்கள் கொந்தளிப்புடன் எதிர்ப்பார்கள்.

அவர்கள் ஒரு பொருளுக்கு 100 சதவீதம் வசூலிக்கும்போது, நாம் அதே பொருளுக்கு 25 சதவீதம் மட்டும் வசூலிப்பது முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் இதை உங்களுக்காகத்தான் செய்கிறேன். இதில் நீங்கள் எனக்கு ஆதரவு தரவேண்டும்.

ஒரு பொருளுக்கு நாம் எதுவும் வரியாக வசூலிக்காதபோது, எந்த நாடும் அதே பொருளுக்கு 100 சதவீதம் வரி வசூலிப்பதை அமெரிக்கா இனி அனுமதிக்காது. அவர்கள் நம்மை மதிக்கவில்லை. நாம் முட்டாள்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உலகம் நமது நாட்டை மீண்டும் மதிக்கத்தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ந்து இருக்கிறது. மற்ற நாடுகள் மிகவும் மோசமான நிலையிலேயே வளர்ச்சியடைந்துள்ளன. இவ்வாறு டிரம்ப் கூறினார்.

மேலும் செய்திகள்