பாலகோட் தீவிரவாத பயிற்சி முகாம் தாக்கி அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன-பாதுகாப்பு துறை அதிகாரிகள்
பாலகோட் தீவிரவாத பயிற்சி முகாம் தாக்கி அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது;
புதுடெல்லி
காஷ்மீரின் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1,000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய விமானப்படை வீசியது இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
12 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவற்றை முற்றிலும் அழித்தன.
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட் பகுதியில் நடந்த தாக்குதலில் ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 200-300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்திய விமானப்படை பாலகோட் மீது தாக்குதல் நடத்தியதற்கு என்ன ஆதாரம் உள்ளது என மேற்குவங்க முதல்வர் மம்தா கேட்டிருந்தார். இதே போன்று சிலர், பாலகோட் பாகிஸ்தான் எல்லைக்குள் இல்லை எனவும், அது இந்திய எல்லைக்குள் தான் உள்ளது எனவும் எதிர்க்கட்சிகள் சில கூறி வருகின்றன.
இந்த தாக்குதலால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை என்று கூறி, சில செயற்கைக்கோள் படங்களை காட்டி சிலர் சர்ச்சை எழுப்பினர்.
இந்நிலையில், தீவிரவாத பயிற்சி முகாம் தாக்கி அழிக்கப்பட்டதற்கான, எஸ்ஏஆர் (SAR) எனப்படும் synthetic aperture radar படங்கள் பாதுகாப்புத்துறை வசம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:-
பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதாரங்கள் உள்ளது. செயற்கைக்கோள் படங்கள் உள்ளது. அவற்றில் பயங்கரவாத முகாம் கட்டிடங்களை சுற்றி 150 முதல் 200 மீட்டர் தொலைவிற்கு குண்டுகள் வீசப்பட்டது தெளிவாக உள்ளது.
தாக்குதலுக்கு முன்பும், பின்பும் உள்ள செயற்கைகோள் புகைப்பட ஆதாரங்களும் உள்ளன. அதனை வெளியிட வேண்டுமா, வேண்டாமா என்பது அரசின் விருப்பம். தாக்குதலில் சேதமடைந்த பகுதியை சரி செய்யும் முயற்சியில் பாக்.கும் ஈடுபட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.