4 மணி நேரம் தாமதம் ஏன்? அபிநந்தனிடம் வீடியோ வாக்குமூலம் பெற்ற பாகிஸ்தான்

இந்தியாவிடம் ஒப்படைக்கும் முன் அபிநந்தனிடம் வீடியோ வாக்குமூலம் பெற்ற பாகிஸ்தான் ராணுவம். அவர் என்ன பேசினார் என்பது வெளியாகி உள்ளது.

Update: 2019-03-02 05:18 GMT
புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக கடந்த மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட்  பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின்போது அபிநந்தன் என்ற விமானி ஓட்டிய மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

இதில் விமானத்திலிருந்து பாதுகாப்பாக பாராசூட் மூலம் வெளியே பறந்த அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அதன் பின் சர்வதேச அழுத்தங்கள், இந்தியாவின் நெருக்கடிகள் ஆகியவற்றால், அபிநந்தன் இரண்டரை நாட்களுக்குப் பின் நேற்று அடாரி வாகா எல்லைப் பகுதியில் இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.

மாலை 4 மணிக்கு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவு 9 மணிக்குதான் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.

இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படும் முன்,அவரிடம் பாகிஸ்தான் ராணுவம் வீடியோ  மூலம் வாக்குமூலம் பதிவு செய்து அதை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் பல முறை எடிட் செய்யப்பட்டும், கட் செய்யப்பட்டும் இருக்கிறது. இதனால், இந்த வீடியோவில் அபிநந்தன் பேசியது,பாகிஸ்தான் ராணுவத்தினரின் வற்புறுத்தலின் பெயரில் பேசினாரா, அல்லது இயல்பாக அங்கு இருந்த சூழலில் பேசினாரா என்பது தெளிவாக அறியப்படவில்லை.

மேலும், பாகிஸ்தான் ராணுவத்துக்கு நல்லபெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக புகழந்து பேசக் கூறி அந்த வீடியோ எடுக்கப்பட்டதா எனவும் தெரியவில்லை.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அந்த வீடியோவை பாகிஸ்தான் அரசு உள்ளூர் ஊடகங்களில் வெளியிட்டது. அந்த வீடியோவில், எவ்வாறு இந்திய விமானி பிடிபட்டார் என்று தலைப்பில் இருந்தது. இந்த வீடியோ பதிவு செய்வதன் காரணமாகத்தான் அபிநந்தன் ஒப்படைப்பிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வீடியோவில் அபிநந்தன் பேசுகையில், " பாகிஸ்தான் வான்வெளிக்குள் நான் இலக்கை நோக்கி பறந்தபோது, என்னுடைய விமானம் பாகிஸ்தான் விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன்பின் விமானத்தில் இருந்து வெளியே பறந்த நான், பாராசூட் மூலம் குதித்தேன். என்னிடம் ஒரு துப்பாக்கி இருந்தது.

நான் விழுந்த இடத்தில் ஏராளமான மக்கள் இருந்தனர். அவர்களிடம் இருந்து என்னைக் காத்துக்கொள்ள ஒரு வழி மட்டுமே இருந்தது. என்னுடைய துப்பாக்கியைக் கைவிட்டு, நான் ஓட முயற்சித்தேன். மக்கள் என்னைத் துரத்தினார்கள், அவர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர்.

அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் என்னை அவர்களிடம் இருந்து மீட்டனர். அவர்கள் மக்களிடம் இருந்து என்னை மீட்ட பின், எனக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. என்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் அவர்களின் முகாமுக்குக் கொண்டு சென்று,  எனக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். எனக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.

பாகிஸ்தான் ராணுவத்தினர்தான் என்னை மக்கள் கூட்டத்தில் இருந்து காப்பாற்றினார்கள். பாகிஸ்தான் ராணுவத்தினர் மிகுந்த நேர்த்தியாகவும், அவர்களின் நடத்தை நல்லவிதமாகவும் இருந்தது" என அபிநந்தன் தெரிவித்தார்.

இந்த வீடியோவில் அபிநந்தன் வர்த்தமான் பேசியது பாகிஸ்தான் ராணுவத்தினரின் நெருக்கடியால் பேசினாரா அல்லது இயல்பாகப் பேசினாரா என்பது தெரியவில்லை.

மேலும் செய்திகள்