ஜெனீவா ஒப்பந்தமும்... போர்க்கைதிகளும்...

போர்... அழிவுக்கு வழிவகுக்கும் நாசகார செயல். இரு நாடுகளிடையே போர் ஏற்படும் போது சம்பந்தப்பட்ட அந்த இரு நாடுகளுக்குமே உயிர்ச்சேதம், பொருட்சேதம் என்று பெரும் இழப்பு ஏற்படுகிறது.;

Update: 2019-03-01 23:45 GMT
தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு போரில் ஈடுபடும் ராணுவ வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. மரணம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற நிலையிலேயே அவர்கள் தாய் நாட்டுக்காக ஆயுதம் ஏந்துகிறார்கள். போரின் போது பல வீரர்கள் எதிரி நாட்டு ராணுவத்திடம் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் உண்டு.

இதற்கு முடிவு கட்ட சர்வதேச நாடுகள் தீர்மானித்தன. அதன் விளைவாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில், போர்க்கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த ஒப்பந்தம் முதன் முதலாக கடந்த 1864-ம் ஆண்டு கையெழுத்தானது. இதில் 12 நாடுகள் கையெழுத்திட்டன. போர்க்கைதிகளாக பிடிபடும் எதிரி நாட்டு வீரர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள், போர் வீரர்களுக்கான நிவாரண உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றன.

ஆனால் அப்போது பெரும்பாலான நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தன.

அதன்பிறகு அவ்வப்போது நடந்த போர்களால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டதால், கூடுதல் விதிமுறைகளையும், போர்க்கைதிகளை நடத்த வேண்டிய விதம் குறித்த கூடுதல் அம்சங்களையும் சேர்த்து ஜெனீவாவில் மேலும் 4 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட இரண்டாம் உலகப் போர் மனித குல வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. பல நாடுகளின் ராணுவ வீரர்கள் எதிரி நாடுகளின் ராணுவத்தால் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்கு பின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் ஜெனீவாவில் கூடி, போர்க்கைதிகளாக பிடிபடும் ராணுவ வீரர்களை நடத்த வேண்டிய விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 169 நாடுகள் கையெழுத்திட்டன. அதிக நாடுகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தமே ‘ஜெனீவா ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஜெனீவா ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்ததும் போர்க்கைதிகளாக பிடிபட்ட எதிரி நாட்டு ராணுவ வீரர்களை உடனடியாக விடுதலை செய்து சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் அவர்களை துன்புறுத்தவோ, கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறவோ கூடாது. இதுவே ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் ஆகும்.

இந்த ஒப்பந்தத்தின்படிதான் தற்போது பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார்.

இதற்கு முன்னர், கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது பாகிஸ்தானிடம் போர்க்கைதியாக பிடிபட்ட இந்திய விமானப்படை அதிகாரி கே.நச்சிகேட்டா 8 நாட்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்