கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி

கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2019-02-04 12:22 GMT
புதுடெல்லி,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கீழடி. இங்கு பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது.  முதற்கட்டமாக நடந்த இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து 2016-ம் ஆண்டு 2-ம் கட்டமாகவும், 2017-ம் ஆண்டு 3-ம் கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. 

அகழாய்வு முடிவில் கீழடியில் வைகை ஆற்றின் கரையோரத்தில் பண்டைய தமிழர்கள் நகரம் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து கீழடியில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கீழடியில் ஆய்வு செய்து 4-ம் கட்ட அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

இந்த நிலையில், கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 2018-19-ம் ஆண்டில் அகழாய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.  கீழடியில் மீண்டும் அகழாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்