பீமா-கோரேகாவ் வன்முறை வழக்கு: மும்பை விமான நிலையத்தில் ஐ.ஐ.டி. பேராசிரியர் கைது - உடனே விடுவிக்க கோர்ட்டு உத்தரவு

பீமா-கோரேகாவ் வன்முறை வழக்கு தொடர்பாக, மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.ஐ.டி. பேராசிரியரை உடனே விடுவிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-02-02 21:45 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பீமா- கோரேகாவில் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் நடந்தது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முந்தைய நாள் நடந்த எல்கர் பரிசத் மாநாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதால் தான் பீமா-கோரேகாவ் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

எனவே போலீசார், வன்முறையை தூண்டும் வகையில் பேசியது, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக 9 பேரை கைது செய்தனர். மேலும் கோவா ஐ.ஐ.டி. பேராசிரியர் ஆனந்த் தெல்டும்டேவை தேடி வந்தனர். இந்த நிலையில், கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு மும்பை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை வந்திறங்கிய ஆனந்த் தெல்டும்டேவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை புனே செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, பேராசிரியர் ஆனந்த் தெல்டும்டேவிற்கு வருகிற 11-ந் தேதி வரை கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதாகவும், ஆனால் போலீசார் கைது செய்துவிட்டதாகவும் அவரது வக்கீல் வாதிட்டார். இதனை பரிசீலித்த நீதிபதி, பேராசிரியரை கைது செய்தது சட்டவிரோதம் என்று கூறி விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்