இடைக்கால பட்ஜெட் வெறும் தொடக்கம் மட்டுமே அதை விட முழு பட்ஜெட் அதிக நன்மை தரும் - பிரதமர் மோடி

இடைக்கால பட்ஜெட் வெறும் தொடக்கம் மட்டுமே, தேர்தலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் அனைத்துப் பிரிவினருக்கும் அதிக நன்மைகள் தருவதாக இருக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-02 09:23 GMT
கொல்கத்தா

மேற்கு வங்காளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்து உள்ளார். 1950களில் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் அதிகம் வசிக்கும் தாகூர்நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்போது அவர் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசத்திலிருந்து திரும்பி வந்தவர்கள் இந்தியாவில் மரியாதையாக வாழ அனுமதிக்கப்படவில்லையா? அவர்களுக்கு, குடிமக்களுக்கான திருத்தம் சட்டவரைவை அறிமுகப்படுத்தியுள்ளோம். 

தாங்கள் வசிக்கும் நாடுகளில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி அடைக்கலம் தேடி வரும் இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகளுக்கு இந்தியாவை விட்டால் வேறுவழி இல்லை. எனவேதான் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளோம்.   மாநிலங்களவையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும்.

சுதந்திரத்திற்குப் பிறகு கிராமத்திற்கு கொடுக்கப்பட்ட கவனம் போதாது. மேற்கு வங்கம் மோசமாக உள்ளது. மேற்கு வங்காளத்தின் நிலைமையை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது.

இடைக்கால பட்ஜெட் வெறும் தொடக்கம் மட்டுமே தேர்தலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் மேலும் அதிக நன்மைகள் தருவதாக இருக்கும் என கூறினார்.

ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிப்பது, வருமான வரி உச்சவரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியது உள்ளிட்ட, இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகளை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். 

மேலும் செய்திகள்