உ.பி. தேர்தலில் பிரியங்கா ஒரு காரணியாகவே இருக்க மாட்டார் - பா.ஜனதா
உ.பி. தேர்தலில் பிரியங்கா ஒரு காரணியாகவே இருக்க மாட்டார் என துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறியுள்ளார்.
கொல்கத்தா,
சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு மத்தியில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் பிரியங்காவை அரசியலில் களமிறக்கியுள்ளது. எதிர்பாராத சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி மற்றும் பிரியங்காவின் வருகை பா.ஜனதாவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனை பா.ஜனதா நிராகரிக்கிறது. 74 தொகுதிகளில் வெற்றிப்பெறுவோம் என கூறுகிறது. இதற்கிடையே வெளியாகும் கருத்துக்கணிப்புகளில் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி 55 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என தெரிவிக்கிறது.
இந்நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த அம்மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா, உ.பி. தேர்தலில் பிரியங்கா ஒரு காரணியாகவே இருக்க மாட்டார் என கூறியுள்ளார். “காங்கிரசுக்காக ஏற்கனவே இரு தொகுதிகளில் பிரியங்கா பிரசாரம் செய்தார். அவரால் எந்த முடிவையும் கொடுக்க முடியவில்லை. எங்களுடைய தலைவர்கள் மோடி, அமித்ஷா ஜி, யோகி ஜியால் மட்டுமே எதிர்க்கட்சிகளை தோற்கடிக்க முடியும். பா.ஜனதா கூட்டணி 74 தொகுதிகளை தாண்டி வெற்றிப்பெறும்” என கூறியுள்ளார்.