‘விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு 17 ரூபாயா..?’ ராகுல் காந்தி காட்டம்

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 17 ரூபாய் என அறிவித்துள்ளது அவமதிக்கும் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2019-02-01 10:33 GMT

விவசாய விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை,  எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகள் அமல் மற்றும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு மாதம் ரூ. 500 கொடுக்கும் வகையில் திட்டம் கொண்டுவந்துள்ளது.  இத்திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.  மத்திய அரசின் அறிவிப்பை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. 

கவுரவமாக வாழச்செய்யுமா?

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், “பட்ஜெட் அறிவிப்பு எதிர்பார்த்ததை பூர்த்திசெய்யும் வகையில் இல்லை. நடுத்தர குடும்பங்கள் பயன் அடையும் வகையிலான வருமான வரி சலுகை என்ற நல்ல அறிவிப்பை பார்த்தோம். ஆனால் விவசாயிகளுக்கு ரூ. 6000 என்பது; அவர்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இது எப்படி அவர்கள் கவுரவமாக வாழ வழிவகைச்செய்யும்?” என கேள்வியை எழுப்பினார். 

ராகுல் காந்தி காட்டம் 

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 17 ரூபாய் என அறிவித்துள்ளது அவமதிக்கும் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில் “5 ஆண்டுகளாக மோடி தலைமையிலான ஆட்சியின் திறமையின்மையாலும், ஆணவத்தாலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு நாளைக்கு விவசாயிகளுக்கு 17 ரூபாய் கொடுப்பது அவர்களை அவமதிக்கும், செயல்” என கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்