பஞ்சாயத்து தேர்தலில் படுதோல்வி மனைவிக்கு ஓட்டு போடாதவர்களிடம் பணத்தை திருப்பிக்கேட்ட கணவர் தெலுங்கானாவில் ருசிகரம்
பஞ்சாயத்து தேர்தலில் மனைவி தோல்வி அடைந்ததால் ஓட்டுப் போடாத வாக்காளர்களிடம் கணவர் பணத்தை திருப்பிக் கேட்ட ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.;
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஆர்யபேட் மாவட்டம் ஜெஜிரெட்டிகுடேம் கிராமத்தை சேர்ந்தவர் உப்பு பிரபாகர். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு நடந்த கிராம பஞ்சாயத்து வார்டு தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக அவருடைய மனைவி ஹேமாவதி போட்டியிட்டார்.
குடம் சின்னத்தில் ஹேமாவதி போட்டியிட்டதால் உப்பு பிரபாகர் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு குடங்களை கொடுத்து ஓட்டு கேட்டார். மேலும் மது மற்றும் பணமும் கொடுத்தார்.
ஆனால் ஹேமாவதி பஞ்சாயத்து வார்டில் மொத்தம் உள்ள 269 ஓட்டுகளில் 24 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இதனால் உப்பு பிரபாகர் வீடு, வீடாக சென்று ஓட்டுக்காக தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு வாக்காளர்களிடம் கேட்டார்.
திருப்பிக் கொடுத்தனர்
‘எனது மனைவிக்கு ஓட்டுப் போடாததால் அந்த பணம் எனக்கு சொந்தமானது, எனவே பணத்தை திருப்பி கொடுங்கள்’ என்று மிரட்டினார். மேலும் ஒரு தட்டில் மந்திரிக்கப்பட்ட அரிசியை நிரப்பி அதில் மஞ்சள் தூளை வைத்து தனது மனைவிக்குத்தான் ஓட்டு போட்டீர்களா? என்று சத்தியம் செய்யும்படியும் கேட்டார்.
அப்படி சத்தியம் செய்யாதவர்களிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். இதனால் பயந்துபோன கிராம மக்கள் உண்மையை சொல்லி அவரிடம் பணத்தையும், குடத்தையும் திருப்பி கொடுத்தனர்.
இதற்கிடையே, உப்பு பிரபாகர் வீடு, வீடாக சென்று தான் ஓட்டுக்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தற்போது தலை மறைவாகி விட்டார்.