சபரிமலை போல வாவர் மசூதிக்கு செல்வோம் என்று சென்ற தமிழக பெண்கள் கேரளாவில் கைது
சபரிமலை போல வாவர் மசூதிக்கு செல்வோம் என்று சென்ற தமிழக பெண்கள் எருமேலியில் கைது செய்யப்பட்டனர்.;
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ந்தேதி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் சபரிமலை கோவில் அருகே அமைந்துள்ள வாவர் மசூதிக்கு செல்ல முயன்ற 6 பேரை கேரள மாநில போலீஸ் கைது செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 6 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இரு மதங்களுக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக அவர்களை கைது செய்துள்ளது.
எருமேலி பகுதியில் வாவர் மசூதிக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு நுழைய சில தமிழக பெண்கள் திட்டமிட்டுள்ளதாக கேரள போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கேரள போலீஸ் சோதனையை தீவிரப்படுத்தியது. அப்போது மூன்று பெண்கள் உள்பட 6 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்களில் சுசிலா (வயது 35), ரேவதி (வயது 39) திருப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், காந்திமதி (வயது 51) திருநெல்வேலியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.