கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம்: வாகனங்கள் தடுத்து நிறுத்தம், டயர்கள் எரிப்பு; தேர்வுகள் ஒத்திவைப்பு
கேரளாவில் சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்தில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. டயர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.;
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. சபரிமலையிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்ததால் தடை செய்யப்பட்ட வயதுடைய பல பெண்கள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர்.
ஆனால் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து (வயது 42), மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா (44) ஆகிய 2 பெண்கள் நேற்று அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதல்-மந்திரி பினராயி விஜயனும் உறுதி செய்தார்.
சபரிமலையின் பாரம்பரியத்தை மீறி பெண்கள் தரிசனம் செய்ததற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் அந்த கட்சி போராட்டத்தில் இறங்கியது.
இந்த நிலையில், சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.
அதன்படி இந்த போராட்டம் இன்று காலை 6 மணியளவில் தொடங்கியது. இந்த போராட்டம் 12 மணிநேரம் தொடரும். முதற்கட்ட தகவல்களின்படி, ஆட்டோ ரிக்சாக்கள், இரு சக்கர வாகனங்கள் ரெயில்வே நிலையங்களுக்கு செல்கின்றன. பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
ஆனால் கோழிக்கோட்டில் காலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தியும், டயர்களை தீ வைத்து எரித்தும் உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. போராட்டத்திற்கு பா.ஜ.க. ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இன்று கருப்பு நாளாக கடைப்பிடிக்கிறது.
கேரளாவில் கேரள, மகாத்மா காந்தி, காலிகட் மற்றும் கண்ணூர் ஆகியவை உள்பட பல்வேறு பல்கலை கழகங்கள் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளன.