பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனு தாக்கல்

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடர்பான வழக்கில், கேரள அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2019-01-02 18:30 GMT
புதுடெல்லி,

தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு இடையே கடந்த 1970-ம் ஆண்டில் கையெழுத்தான நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் ஆழியாறு அணையில் இருந்து 7.25 டி.எம்.சி. தண்ணீரும், சோலையாறில் இருந்து 12.3 டி.எம்.சி. தண்ணீரும் தமிழக அரசு கேரளாவுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசு கேரளாவுக்கு உரிய தண்ணீரை கொடுக்கவில்லை என்றும், ஒப்பந்தத்தின் படி கேரளாவுக்கு உரிய நீரை தமிழ்நாடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இரு மாநிலங்களும் ஏற்கனவே உரிய ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளன. தமிழக அரசு தரப்பில் ஏற்கனவே பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசின் சார்பில் தமிழக அரசின் பதில் மனுவுக்கு எதிர் பதில் மனு தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்