ரூ.2 லட்சம் செலவு: கிலோ 20 பைசாவுக்கு விலைபோன கத்தரிக்காய்: விரக்தியில் தோட்டத்தையே அழித்த விவசாயி

மராட்டியத்தில் ரூ. 2 லட்சம் வரை செலவு செய்து சந்தையில் கத்திரிக்காய் கிலோ 20 பைசாவுக்கு விலைபோனதால் விரக்தியில் விவசாயி தோட்டத்தையே அழித்துள்ளார்.

Update: 2018-12-03 11:26 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம், ராஹாதா அருகே உள்ள சக்குரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பவக்கே, இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கத்தரிக்காய் பயிரிட்டு இருந்தார். இதற்காக கத்தரிக்காய் செடிக்கு சொட்டுநீர் பாசனம், உரம், பூச்சி கொல்லி மருந்துகள் அடித்தல் என சுமார் ரூ 2 லட்சம் வரை செலவு செய்தார்.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு கத்தரிக்காய் அறுவடை செய்து மொத்த சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றார். அப்போது அங்கு கிலோ 20 பைசாவுக்கு மட்டுமே கத்தரிக்காய் விலை போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி ரூ.2 லட்சம் செலவு செய்து கத்தரிக்காய்க்கு  வெறும் ரூ.65 ஆயிரம் மட்டுமே கிடைத்தது.

இதனால் விரக்தி அடைந்த விவசாயி ராஜேந்திர தோட்டத்தில் கத்திரிக்காய் இருந்தால், இழப்பு தான் ஏற்படும் என்று நினைத்து 2 ஏக்கரில் பயிரிடப்பட்ட கத்தரிக்காய் செடிகளை வேரோடு பிடுங்கி தோட்டத்தை அழித்து விட்டார்.

இது குறித்து விவசாயி ராஜேந்திர பாவாகே கூறியதாவது:

எனது தோட்டத்தில் 2 ஏக்கரில் கத்தரிக்காய் பயிரிட்டு வளர்த்து வந்தேன். இதற்காக சொட்டுநீர் பாசனம், பூச்சிக்கொல்லி மருந்து, உரம், கூலிவேலைக்கு ஆட்களை வைத்தது என ரூ 2 லட்சம் வரை செலவு செய்தேன். ஆனால் சந்தையில் கத்தரிக்காய் விற்பனை ஆனது கிலோ 20பைசாவுக்குதான் விலைக்கு எடுக்கப்பட்டது. இதன்மூலம் எனக்கு வெறும் ரூ.65 ஆயிரம் மட்டுமே கிடைத்தது.

கத்தரிக்காய்க்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் கடனாகத்தான் வாங்கியது அதில் இன்னும் ரூ.35 ஆயிரம் கடனை அடைக்கவில்லை. எனக்கு ஏற்பட்ட இழப்பை எப்படி ஈடுகட்டபோகிறேன் என்று தெரியவில்லை. மனதில் விரக்தி ஏற்பட்டதால் பயிரிடப்பட்ட அனைத்து கத்தரிக்காய் செடிகளையும் பிடுங்கி எறிந்து விட்டேன்.

இனிமேலும் விவசாயம் செய்ய முடியாது. வீட்டில் உள்ள ஆடு, மாடுகளை வைத்து அவற்றை கவனிக்க போகிறேன். கத்தரிக்காய் விவசாயம் மீது அதிக நம்பிக்கை வைத்தேன். எனது கால்நடைகளையும் இனிமேல் எப்படி காப்பாற்றுவது என்று தெரியவில்லை எனக்கண்ணீருடன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்