முப்படைகளை நவீனமயமாக்க ரூ.3 ஆயிரம் கோடிக்கு புதிய தளவாடங்கள் - நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல்

முப்படைகளை நவீனமயமாக்குவதற்காக ரூ.3 ஆயிரம் கோடிக்கு புதிய தளவாடங்கள் வாங்குவதற்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.;

Update: 2018-12-01 22:15 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, நமது நாட்டின் பாதுகாப்பு துறையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

முப்படைகளும் பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும், எந்த சவாலையும் எந்த நேரத்திலும் சந்திக்கத்தக்க அளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது.

அதற்காக முப்படைகளும் நவீனமயமாக இருக்க வேண்டும் என்று எண்ணி ,அவற்றுக்காக நவீன ஆயுதங்களையும், தளவாடங்களையும் வாங்குவதில் ஆர்வம் செலுத்துகிறது.

இந்த நிலையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டி.ஏ.சி. என்னும் ராணுவ தளவாடங்கள் கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் முப்படைகளுக்கும் அதிநவீன ஆயுதங்களையும், தளவாடங்களையும் ரூ.3 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய கடற்படையை பலம் வாய்ந்ததாக ஆக்குவதற்கு, ரஷியாவில் கட்டப்படுகிற ‘பி-1135.6’ ரக போர்க்கப்பல்கள் (4 எண்ணிக்கை) வாங்கப்படுகின்றன. இதற்கான ஒப்புதலை பாதுகாப்புத்துறைக்கான மத்திய மந்திரிகள் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்புதல் அளித்தது.

இந்த போர்க் கப்பல்களுக்காக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 2 பிரமோஸ் ஏவுகணைகள் வாங்க ராணுவ தளவாடங்கள் கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதேபோன்று, போர்க்களத்தில் பிரதான டாங்கியாக செயல்படுகிற அர்ஜூன் கவச வாகனங்களுக்காக, டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட நவீன கவச மீட்பு வாகனங்கள் வாங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்