நிலமுறைகேடு, சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு - ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

நிலமுறைகேட்டில் சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை 2-வது முறையாக சம்மன் அனுப்பியது.

Update: 2018-11-30 23:00 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு தொடர்புள்ள நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் 2015-ம் ஆண்டு முறைகேடாக நிலம் வாங்கியது. இதுதொடர்பாக ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். 374.44 ஹெக்டேர் நிலம் தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தையும் அரசு ரத்து செய்தது.

பின்னர் அமலாக்கத்துறை இந்த நில முறைகேட்டில் பெரிய அளவில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்தது. வதேராவுக்கு தொடர்புள்ள மகேஷ் நாகர் போன்ற சிலரது இடங்களில் சோதனை நடத்தியது. கடந்த வருடம் நாகரின் நெருங்கிய கூட்டாளி அசோக்குமார், ஜெய்பிரகாஷ் பாகார்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரிகள் உள்பட சிலரது ரூ.1.18 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத்துறை இந்த வழக்கில் இணைத்தது. அமலாக்கத்துறை இந்த வழக்கில் வதேரா பெயரை சேர்க்கவில்லை. அரசு அதிகாரிகள் மற்றும் சில நில மோசடிதாரர்கள் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.

நவம்பர் மாத தொடக்கத்தில் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை முதல்முறையாக சம்மன் அனுப்பியது. அதில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி கூறப்பட்டு இருந்தது. ஆனால் ராபர்ட் வதேரா ஆஜராகவில்லை.

எனவே நேற்று மீண்டும் அமலாக்கத்துறை ராபர்ட் வதேராவுக்கு 2-வது முறையாக சம்மன் அனுப்பியது. அதில், சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் உங்களிடம் வாக்குமூலம் வாங்க வேண்டும். அதற்காக அடுத்த வாரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா கூறும்போது, “பா.ஜனதா அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றை அழுக்கு தந்திர துறைகளாக பயன்படுத்தி வருகிறது. பா.ஜனதா 5 வருடங்களாக இதுபோன்ற பொய்யான, போலியான தகவல்களை விசாரணை அலுவலகங்களை பயன்படுத்தி வெளியிட்டு வருகிறது. தேர்தலுக்காக இப்போது மக்களை திசைதிருப்ப நினைக்கிறது. இதில் பா.ஜனதா வெற்றி பெற முடியாது” என்றார்.

மேலும் செய்திகள்