தூர்தர்சன் பணியாளர்கள் ராணுவ வீரர்கள் போன்று நாட்டுக்கு சேவை செய்கின்றனர்; மத்திய மந்திரி ரத்தோர்
தூர்தர்சன் பணியாளர்கள் ராணுவ வீரர்கள் போன்று நாட்டுக்கு சேவை செய்து வருகின்றனர் என மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
சத்தீஷ்காரில் கடந்த அக்டோபர் 30ந்தேதி நடந்த நக்சலைட்டுகள் தாக்குதலில் தூர்தர்சன் செய்தி சேனலின் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த சாஹு என்பவர் கொல்லப்பட்டார்.
இதற்காக பிரசார் பாரதி சார்பில் நடந்த இரங்கல் கூட்டத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, பல ஊடக துறையினர் இருந்தபொழுதும் தேசிய ஒளிபரப்பு ஊடகங்களாக தூர்தர்சன் மற்றும் டி.டி. நியூஸ் உள்ளன.
நாட்டை காக்கும் சேவையில் ராணுவ வீரர்கள் செயல்படுவது போன்று, நாமும் நாட்டுக்கு சேவை செய்து வருகிறோம். மக்களுக்கு செய்திகளை கொண்டு வருவதற்கு பத்திரிகையாளர்கள் படும் சங்கடங்களை பற்றி மக்கள் மெதுவாக தெரிந்து கொள்ள தொடங்கியுள்ளனர்.
நாட்டின் வளர்ச்சியை நிறுத்த விரும்புகிறோம் என்ற தகவலை எதிரிகள் தெரிவிக்க விரும்பிய இடத்தில் சாஹு உயிரிழந்து உள்ளார். அவரது குடும்பத்தினர், தனித்து விடப்பட்டு விட்டோம் என உணர கூடாது என்று கூறியுள்ளார்.
டி.டி. நியூஸ் சேனலில் பணியாற்றும் நமது பணியாளர்கள் பல்வேறு பணிகளுக்காக வெளியே செல்லும்பொழுது தைரியமுடன் மற்றும் வீரமுடன் செயல்படுவர் என்பது எனக்கு தெரியும். எதுவும் நடக்கலாம். அந்த இடத்தில் இருப்பதற்கு, அங்கு செல்வதற்கு, அங்கு செயல்படுவதற்கு என பெரிய அளவிலான தைரியம் மற்றும் தொழில் சார்ந்த அறிவு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.