டெல்லியில் விவசாயிகள் மீதான போலீஸ் தடியடி - எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

டெல்லிக்கு ஊர்வலமாக வந்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.;

Update: 2018-10-02 23:45 GMT
புதுடெல்லி,

விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் உத்தரபிரதேச மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தி தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுபற்றி தனது டுவிட்டர் பதிவில், “டெல்லிக்குள் அமைதியாக ஊர்வலமாக வரமுயன்ற விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இப்போது விவசாயிகளின் வேதனைக் குரல்கள் கூட தலைநகர் டெல்லிக்குள் நுழைய முடியாது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மராட்டிய மாநிலம் வார்தாவில் உள்ள காந்தி சேவா ஆசிரமத்தில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு பின்னர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா கூறும்போது, “காந்தி பிறந்தநாள், லால்பகதூர் சாஸ்திரி நூற்றாண்டு பிறந்தநாள் ஆகிய நாளில் மோடி, யோகி அரசுகள் இதுபோன்ற தாக்குதலை நடத்தியிருப்பதை இந்த தேசம் சகித்துக்கொள்ளாது. சில தொழில் அதிபர்களின் பெரும் கடன் தொகையை தள்ளுபடி செய்த மத்திய அரசால் ஏன் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய முடியாது” என்றார்.

விவசாயிகளின் ஊர்வலத்துக்கு ஆதரவு தெரிவித்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில், ‘டெல்லி அனைவருக்கும் பொதுவானது. எனவே விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். அவர்களை தடுத்துநிறுத்தியது தவறான செயல்’ என்று கண்டித்தார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, “மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பண மதிப்பு இழப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகிய நடவடிக்கைகளால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி செல்ல முயன்றனர். கடந்த 4 ஆண்டுகளில் உத்தரபிரதேசம் உள்பட பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்” என்றார்.

ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், அகில இந்திய விவசாயிகள் சங்கமும் விவசாயிகள் மீதான போலீஸ் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

மேலும் செய்திகள்