பாராளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல், எந்திரங்கள் வாங்க ரூ.4,555 கோடி தேவை என சட்ட கமிஷன் தகவல்
பாராளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு எந்திரங்களை வாங்க ரூ.4,555 கோடி தேவை என சட்ட கமிஷன் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் நாட்டுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுகிறது. இதேபோன்று தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்துவதால் வழக்கமான பணிகள் பாதிக்கின்றன. இதன் காரணமாக நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி சட்ட ஆணையம் ஆய்வு செய்துவருகிறது.
இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பு அனைத்து கட்சிகளின் கருத்தையும் கேட்க முடிவு செய்தது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது, ஆலோசனையையும் மேற்கொண்டது. நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற மாநில சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் பொதுமக்களின் பணம் மிச்சமாகும், பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக நிர்வாகத்தின் மீதான சுமை குறையும். இதன்மூலம் அரசாங்கம் கொள்கைகளை சிறப்பாக செயல்படுத்த முடியும் என சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அரசியல் சாசனப் பிரிவு 172-ஐ திருத்தம் செய்யாமல் இது சாத்தியம் கிடையாது எனவும் கூறியது. இவ்விவகாரத்தில் மாநில அரசின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றியும் கட்ட கமிஷன் கூறியிருந்தது. 12.9 லட்சம் வாக்குப்பதிவு அலகுகள், 9.4 லட்சம் கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் 12.3 லட்சம் ஒப்புகைச்சீட்டு வழங்கும் அலகுகள் கூடுதலாக தேவைப்படுவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து இருக்கிறது. இந்த 3 அலகுகளும் சேர்ந்த வாக்குப்பதிவு எந்திரம் ஒன்றுக்கு ரூ.33,200 செலவாகும்.
இதற்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்காக ரூ.4,555 கோடி தேவைப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.