ரிசர்வ் வங்கி ஊழியர்களின் மொத்த விடுப்பு போராட்டம் ஒத்திவைப்பு

ரிசர்வ் வங்கி ஊழியர்களின் மொத்த விடுப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.;

Update: 2018-09-03 13:28 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும், பணியாளர்களும் செப்டம்பர் 4 மற்றும் 5-ந்தேதிகளில், ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.  சேமநல நிதி, ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டத்துக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பு, அழைப்பு விடுத்து இருந்தது. 

இதனால், நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி பணிகள் மட்டுமின்றி, முக்கிய வங்கிகளின் பணிகளும் பாதிக்கப்படும் என கருதப்பட்ட நிலையில், நாளை(செப்.4) மற்றும் நாளை மறுநாள் (செப்.5) அறிவித்து இருந்த மொத்தமாக விடுப்பு எடுக்கும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

 ரிசர்வ் வங்கியின் மூத்த மேலாண்மை அதிகாரிகளுடனான தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு, தற்செயல்(CL) விடுப்பு எடுக்கும் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற கூடுதல் அவகாசம் அளிக்குமாறு வங்கி நிர்வாகம் அளித்த கோரிக்கையை ஏற்று, இந்த போராட்டம் ஜனவரி 2019 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்