மோடி ஆட்சியில் தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல் அதிகரிக்கவில்லை: மத்திய மந்திரி சொல்கிறார்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தலித் சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக கூறப்படுவது தவறானது என மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே கூறினார்.;
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தலித் சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக கூறப்படுவது தவறானது என மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே கூறினார்.
டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் இது குறித்து பேசிய அவர், “எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் மோடியின் ஆட்சியில் இது அதிகரித்து உள்ளது என கூறுவதை என்னால் ஏற்க முடியாது. அதே சமயம் எந்த கட்சியும் தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல்களை ஊக்கப்படுத்துவதில்லை. அதே சமயம் அதனை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “கடந்த காலங்கள் ஆயினும் சரி, எதிர் காலத்தில் நடந்தாலும் சரி தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல்களை ஒரு போதும் அரசியல் ஆக்கக்கூடாது. மாறாக அதனை சமூக கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.