உத்தரபிரதேசத்தில் 24 தொகுதிகளை குறிவைக்கும் காங்கிரஸ்
உத்தரபிரதேசம் மாநிலத்தில் 24 தொகுதிகளை அடையாளம் கண்டு அங்கு தேர்தல் பணிகளை காங்கிரஸ் தொடங்கிவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.;
புதுடெல்லி,
மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியை தீர்மானிக்கும் மாநிலமாக 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலம் உள்ளது. 2014 பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா 70 க்கும் அதிகமான தொகுதிகளை தன்வசப்படுத்தியது. இப்போது அங்கு பா.ஜனதாவிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்க முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையே மோதல் போக்கு இருக்கலாம் என பார்க்கப்படுகிறது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது என தெரியவந்துள்ளது.
2019 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ள 24 தொகுதிகளை அடையாளம் கண்டு அங்கு தேர்தலுக்கான பணியை காங்கிரஸ் தொடங்கிவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் மாநில காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவர் பேசுகையில், “இந்த தொகுதிகளில்தான் போட்டியிடுவோம் என்று ஸ்திரம் கிடையாது. நாங்கள் தியாகங்களை செய்யவும் தயாராக இருக்கிறோம், இருப்பினும் கூட்டணி முடிக்கு வராதநிலையில் நாங்கள் எங்களுக்கான அடித்தள பணிகளை செய்ய வேண்டும்,” என கூறியுள்ளார். மிகப்பெரிய போராட்டத்தில் வெற்றியை பெற எங்களுடைய தொண்டர்களை தயார் செய்து வருகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் அடையாளம் கண்டுள்ள தொகுதிகளில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியும் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையே மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மகா கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என காங்கிரஸ் பார்க்கிறது. மத்திய காங்கிரஸே மகா கூட்டணி தொடர்பான முடிவை எடுக்கும் என மாநில காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.