‘ஒகி’ புயலை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது மத்திய மந்திரி தகவல்
மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் புயல் சேதம் குறித்து முதல்–மந்திரி பினராயி விஜயன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் திருவனந்தபுரத்தில் நேற்று ஆய்வு நடத்தினார்.
திருவனந்தபுரம்,
கன்னியாகுமரி மாவட்டத்தை பயங்கரமாக தாக்கிய ‘ஒகி’ புயல் கேரளாவிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் பலியாகியும் விட்டனர்.
இதனால் ‘ஒகி’ புயலை தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும் என்று கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் மத்திய அரசை வலியுறுத்தினார்.
இந்த நிலையில், மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் புயல் சேதம் குறித்து முதல்–மந்திரி பினராயி விஜயன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் திருவனந்தபுரத்தில் நேற்று ஆய்வு நடத்தினார்.
இதன்பின்னர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளவாறு ‘ஒகி’ புயலை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தேவைப்பட்டால் மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கும். ‘ஒகி’ புயல் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தேன். அதில் முன்கூட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுவிட்டனர். எனினும், புயல் தாக்கிய பிறகு, தேவையான அனைத்து நடவடிக்கையும் மாநில அரசு எடுத்துள்ளது’’ என்றார்.