இரட்டை இலை சின்னம் யாருக்கு? அ.தி.மு.க.வின் இரு அணியினரும் தேர்தல் கமி‌ஷனிடம் ஆவணங்கள் தாக்கல்

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி, அ.தி.மு.க.வின் இரு அணியினரும் தேர்தல் கமி‌ஷனிடம் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

Update: 2017-09-30 23:15 GMT

புதுடெல்லி,

தேர்தல் கமி‌ஷனால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய அணியினரும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணியினரும் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி வருகிற 31–ந் தேதிக்குள் விசாரித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இதுபற்றி வருகிற 6–ந் தேதி விசாரணை நடைபெறும் என்றும், அதற்கு முன்னதாக இரு தரப்பினரும் தங்களுக்கு ஆதரவான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ் அனுப்பியது. ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியாக கடந்த 29–ந் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் இரு அணியினரும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்துக்கு சென்று தங்கள் தரப்பிலான ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், அசோக்குமார், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

டி.டி.வி.தினகரன் அணியின் சார்பில் அவருடைய ஆதரவாளர் புகழேந்தி, வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் தேர்தல் கமி‌ஷனிடம் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

ஆவணங்களை தாக்கல் செய்தபிறகு எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பின் நடந்த பொதுக்குழு தீர்மான நகலும், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன என்றார்.

டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி கூறுகையில், அம்மா அணி, புரட்சித்தலைவி அம்மா அணி என்றுதான் அ.தி.மு.க. செயல்பட வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் முற்றிலும் புறக்கணித்து இருப்பது குறித்து தேர்தல் கமி‌ஷனிடம் புகார் மனு ஒன்றை அளித்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், பொதுக்குழு கூட்டத்துக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து 10–க்கும் மேற்பட்டோரை அழைத்துச் சென்று அவர்களிடம் சசிகலா நீக்கம் பற்றி தெரிவிக்காமலேயே கையெழுத்து வாங்கி இருப்பதாகவும், அவர்களது மறுப்பு கடிதத்துடன் தேர்தல் கமி‌ஷனிடம் புகார் செய்து இருப்பதாகவும் கூறினார்.

டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், 2,160 பொதுக்குழு உறுப்பினர்களில் 1,000 பேரின் பிரமாண பத்திரங்களை அளித்து இருப்பதாகவும், அ.தி.மு.க.வின் 55 மாவட்டங்களில் 27 மாவட்ட நிர்வாகிகளுக்கான பட்டியல் தற்போது கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், வருகிற 4–ந் தேதி மேலும் ஆவணங்களை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்