நெருக்கடி நிலையை கொண்டு வந்தவர்கள் சகிப்பின்மையை பற்றி பேசுகிறார்கள் - சுப்ரமணியன் சுவாமி
பாஜக தலைவரான சுப்ரமணியன் சுவாமி நெருக்கடி நிலையை கொண்டு வந்தவர்களே இன்று சகிப்பின்மையை குறித்து பேசுகிறார்கள் என்றார்.
புனே
நகரில் சகிப்பின்மைக் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசுகையில், “நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்திய கட்சி தற்போது சகிப்பின்மையை குறித்துப் பேசுகிறது” என்றார்.
காங்கிரஸ் தேர்தல்களில் வரிசையாக தோற்று வருவதால் அதனிடம் பேசுவதற்கு வேறு விஷயங்களில்லை. அதனால் இந்த சகிப்பின்மை விஷயத்தை உருவாக்கியுள்ளது என்றார் அவர்.
திரைப்பட இயக்குநர் மதுர் பண்டார்கர் என்னிடம் வந்து நெருக்கடி நிலையைப் பற்றி படம் எடுக்கப்போகிறேன் என்றார். “நான் அவருக்கு ஊக்கமூட்டும் வகையில் மக்கள் இப்படத்தை வரவேற்பார்கள், இதை எதிர்ப்பவர்களும் படத்தை பிரபலமாக்குவார்கள்” என்றேன். காங்கிரஸ் கட்சி அவர் படமான “இந்து சர்க்கார்” எனும் நெருக்கடி நிலை காலத்தை நினைவு கூரும் படத்தைக் கண்டு அச்சப்படுகிறது. அதற்கு நெருக்கடி காலக்கட்டத்தை மறுபடியும் நினைவூட்டுவது பிடிக்கவில்லை” என்றார். காங்கிரஸ்சின் இந்த நிலைப்பாடு சகிப்பின்மையில் சேர்ந்ததா இல்லையா? என்று கேட்டார் சுவாமி.