காஷ்மீரில் சோதனைச்சாவடியில் மோதல் ராணுவ வீரர்கள் தாக்கியதில் 7 போலீசார் காயம்
காஷ்மீரின் கண்டர்பெல் மாவட்டத்தில் சோனாமார்க் சோதனைச்சாவடியில் ராணுவ வீரர்கள் தாக்கியதில் 7 போலீசார் காயம்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் கண்டர்பெல் மாவட்டத்தில் அமர்நாத் பக்தர்கள் தங்கி செல்லும் பல்தால் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு தனியார் வாகனங்களில் சில ராணுவ வீரர்கள் சாதாரண உடையில் வந்து கொண்டிருந்தனர். சோனாமார்க் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீசார் அந்த வாகனங்களை நிறுத்துமாறு சைகை காட்டினர்.
ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றதால் குண்ட் பகுதியில் உள்ள அடுத்த சோதனைச்சாவடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அங்கிருந்த போலீசார் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அமர்நாத் யாத்ரீகர்களின் வாகனங்களை அனுமதிக்கும் நேரம் கடந்து விட்டதால், இனிமேல் அந்த வழியாக செல்ல முடியாது என போலீசார் தெரிவித்தனர்.
உடனே அந்த வாகனங்களில் இருந்தவர்கள் தாங்கள் ராணுவ வீரர்கள் என்று கூறியதால், அதற்கான அடையாள அட்டைகளை காட்டுமாறு போலீசார் கேட்டனர். இதனால் இருபிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. அந்த ராணுவ வீரர்கள் அருகில் உள்ள மற்றொரு முகாமில் இருந்து மேலும் சில வீரர்களை அழைத்து அங்கிருந்த போலீசாரை அடித்து உதைத்தனர்.
பின்னர் அருகில் இருந்த போலீஸ் நிலையத்துக்கு சென்ற ராணுவத்தினர் அங்கு பணியில் இருந்த போலீசாரையும் தாக்கி, சூறையாடினர். இதில் துணை சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் காயமடைந்தனர்.
கண்டர்பெல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்த ராணுவமும் உத்தரவிட்டுள்ளது.