போதை மருந்து விவகாரம்: தெலுங்கு நடிகர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிக்கு மிரட்டல்
போதை மருந்து விவகாரம் தொடர்பாக தெலுங்கு நடிகர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிக்கு தொலைபேசியில் மர்மநபர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ஐதராபாத்,
போதை மருந்து விவகாரம் தொடர்பாக தெலுங்கானா கலால் வரித்துறையின் சிறப்பு புலனாய்வு குழு சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டது. இதில் அவர்களுக்கு தெலுங்கு பட உலகைச் சேர்ந்த சிலருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் உள்பட 12 பேருக்கு சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த சம்மன் அனுப்பி இருந்தது. அவர்களில் பிரபல டைரக்டர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.
நேற்றுமுன்தினம் ‘பாகுபலி-2’ படத்தில் நடித்துள்ள நடிகர் பி.சுப்பாராஜூ என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 11 மணி நேரம் விசாரித்தனர்.
இந்த நிலையில் ஐதராபாத் நாம்பள்ளி என்ற இடத்தில் கலால் வரித்துறை அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு நடிகர் தருண்குமார் ஆஜரானார். 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
நடிகர் தருண்குமார் தமிழில் புன்னகைதேசம், எனக்கு 20 உனக்கு 18 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஷார்மியிடம் வருகிற 26-ந்தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்தநிலையில் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் சபர்வாலுக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசும் மர்மநபர்கள், ‘உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கின்றனர் என்று தெரியும். விசாரணையை நிறுத்துங்கள். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து உளவுத்துறையிடம் சபர்வால் புகார் செய்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது. போன் அழைப்பு எங்கிருந்து வருகிறது என்பதை போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
கண்டனம்
இந்த நிலையில் விசாரணை அதிகாரிகளுக்கு பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போதை மருந்து விவகாரத்தில் அடிப்படை ஆதாரம் இன்றி திரை உலகினர் மீது குற்றம் சாட்ட புலனாய்வு அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?. சினிமா துறையை சீரழிக்க சதி நடக்கிறதோ? என்று நினைக்க தோன்றுகிறது. ஒவ்வொருத்தரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தப்படுகிறது.
ஊடகங்களில் யூகத்தின்பேரில் செய்திகள் வெளியாகின்றன. இதனால் திரைத்துறையினரின் எதிர்காலம் என்னவாகும்?. அதிகாரிகள் மனிதாபிமானம் இன்றி செயல்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.