எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ஷெல் தாக்குதல்; பள்ளி கட்டிடம் சேதம், ராணுவ வீரர் வீரமரணம்
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு,
காஷ்மீரில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு ஏற்கனவே இந்திய தரப்பு கடும் எச்சரிக்கையை விடுத்தது.
இந்நிலையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. ராஜோரி மாவட்டத்தில் எல்லையில் சுந்தரபானி செக்டாரில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதலில் ஈடுபட்டது. இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது.
இந்த சண்டையில் உத்தரபிரதேச மாநிலம் ஷகாரன்பூரை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஜெய்திரத் சிங் வீர மரணம் அடைந்தார். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் கிராமங்கள் மற்றும் பள்ளிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. எல்லையில் கார்மாரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய ஷெல் தாக்குதலில் ஃபக்குர் தாரா பள்ளியின் கட்டிடம் பெரிதும் சேதம் அடைந்து உள்ளது.