டெல்லியில் தமிழக விவசாயிகள், தங்களை துடைப்பத்தால் அடித்து நூதன போராட்டம்

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் நேற்று தங்களை தாங்களே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2017-07-21 22:21 GMT
புதுடெல்லி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 16-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் சுமார் 50 விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.

தினமும் வெவ்வேறு வகையிலான போராட்டங்களை நடத்தி வரும் இந்த விவசாயிகள், 6-வது நாளான நேற்று தங்களை தாங்களே துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் நூதன போராட்டத்தை நடத்தினர். அதன்படி விவசாயிகள் தங்கள் கைகளில் ஏந்தியிருந்த துடைப்பத்தால் தங்கள் தலையில் அடித்தவாறே மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

தவறுக்கு தண்டனை

இது குறித்து போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

தமிழக விவசாயிகள் கடன் தொல்லையால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். பல விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களின் குடும்பங்கள் ஆதரவற்று நடுத்தெருவில் நிற்கின்றன. விவசாயிகளின் துயரமும், குரலும் அரசின் செவிகளில் விழவில்லை.

எங்கள் கோரிக்கைகளுக்கு எம்.எல்.ஏ.க்களோ, எம்.பி.க்களோ குரல் தரமறுக்கிறார்கள். அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்ததன் மூலம் விவசாயிகள் தவறு செய்துள்ளார்கள். அந்த தவறுக்கு தண்டனையாக எங்களை நாங்களே இப்படி துடைப்பத்தால் அடித்துக்கொண்டு தண்டனை அளித்துக்கொள்கிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தினமும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்