‘வாட்ஸ் அப்’ வழக்கு ‘அந்தரங்க தகவல்கள், வாழ்வுரிமையின் அங்கம்’ சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

பொதுமக்களின் அந்தரங்க தகவல்கள், வாழ்வுரிமையின் அங்கம். வலைத்தளங்கள் சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள முடியாது -மத்திய அரசு தகவல்

Update: 2017-07-21 21:51 GMT
புதுடெல்லி, 

‘வாட்ஸ் அப்’ நிறுவனம் கடந்த ஆண்டு அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

‘வாட்ஸ் அப்’ பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள், வர்த்தக ரீதியாக தனது மூல நிறுவனமாக ‘பேஸ்புக்’குடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும், இதில் விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

‘வாட்ஸ் அப்’, ‘பேஸ்புக்’ ஆகியவை கோடிக்கணக்கான மக்களின் அந்தரங்க தகவல்களை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் வாதிடுகையில், “பொதுமக்களின் அந்தரங்க தகவல்கள், வாழ்வுரிமையின் அங்கம். அதை தொலை தொடர்பு நிறுவனங்கள் அல்லது சமூக வலைத்தளங்கள் சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள முடியாது” என கூறப்பட்டது. மேலும், “வாட்ஸ் அப், பேஸ் புக், ஸ்கைப் போன்ற சமூக வலைத்தளங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த ஒழுங்குமுறை சட்டம் இயற்ற சிந்தித்து வருகிறோம்” எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், அந்தரங்க விவகாரம் தொடர்பான ஆதார் வழக்கில் 9 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க முடிவு செய்தனர். 

மேலும் செய்திகள்