குட்கா விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி-க்கள் போராட்டம்

குட்கா விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-20 10:07 GMT
தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டதும், இதற்காக ஒரு அமைச்சர், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது.

இதுதொடர்பாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து தொடர்ச்சியாக புகார் எழுப்பிவந்தனர்.

பாராளுமன்ற கூட்டத்தொடரில் குட்கா விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து நிச்சயம் பேசுவேன் என்று டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி-க்கள், நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குட்கா, பான் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  தமிழக அமைச்சர்கள், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த நிலையில், அமைச்சருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்பி-க்கள் சிபிஐ விசாரணை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்