பெங்களூரு சிறையில் விசாரணை அதிகாரி ஆய்வு முறைகேடு புகார்கள் குறித்து 2 மணி நேரம் விசாரணை

கர்நாடக அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு விசாரணை அதிகாரி வினய்குமார் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று நேற்று ஆய்வு நடத்தினார்.

Update: 2017-07-19 23:44 GMT
பெங்களூரு, 

பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு கடந்த 13-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார், கடந்த 17-ந் தேதி கர்நாடக தலைமை செயலாளர் சுபாஷ் சந்திரகுந்தியாவை சந்தித்து பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதுடன், அதுதொடர்பான சில தகவல்களையும் கேட்டு பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேற்று மாலை 3.30 மணியளவில் விசாரணை அதிகாரி வினய்குமார் சென்றார். அவருடன் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள பெங்களூரு குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவி மற்றும் போலீஸ் அதிகாரி ஆனந்த்ரெட்டியும் உடன் சென்றிருந்தார்கள்.

சிறையின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று அதிகாரி வினய்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். மேலும் கைதிகளிடம் போதை பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாக அதிகாரி வினய்குமார் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

சசிகலாவுக்கு சிறையில் ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் அறைகளுக்கு சென்று அவர் ஆய்வு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதா? என்பது குறித்த தகவல்களையும் வினய்குமார் கேட்டு பெற்றுக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டும் இன்றி சிறையில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை அவர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்