சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளுக்கு லஞ்சம்: டெல்லி போலீசாருக்கு ஏப்ரல் மாதமே தெரியும்
சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளுக்கு லஞ்சம் வழங்க முன்வந்தது டெல்லி போலீசாருக்கு ஏப்ரல் மாதமே தெரியும்.
பெங்களூரு,
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வழங்க முன்வந்தது ஏப்ரல் மாதத்திலேயே டெல்லி போலீசாருக்கு தெரியும் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடக முன்னாள் மந்திரியின் உதவியாளர்
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க.(அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர்.
மல்லிகார்ஜூனாவை போலீசார் கைது செய்தபோது அவருடைய செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அவர் அடிக்கடி கர்நாடக முன்னாள் போலீஸ் மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் வி.சி.பிரகாஷ் என்பவரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.
ரூ.2 கோடி கொடுக்க...
இதனால் வி.சி.பிரகாசுக்கும், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்குக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என டெல்லி போலீசார் சந்தேகித்தனர்.
இதன் காரணமாக, வி.சி.பிரகாசை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது, அவர் அளித்த தகவல்களை வாக்குமூலமாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என வி.சி.பிரகாஷ் கூறியதாகவும், பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க அ.தி.மு.க.(அம்மா) அணி முன்வந்ததாகவும் ஆனால் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதா? என்பது பற்றிய விவரங்கள் உறுதியாக தெரியவில்லை எனவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில்...
இந்த புதிய தகவலால் கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபாவின் அறிக்கை வெளியாகும் முன்பே பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுக்க முன்வந்த தகவல் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே டெல்லி போலீசாருக்கு தெரியும் என்ற தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி போலீசாருக்கு தெரிய வந்த இந்த தகவல் மத்திய அரசுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரங்கள் பற்றி கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபாவுக்கு மத்திய மந்திரி ஒருவர் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து தான் அவர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி கொடுக்கப்பட்டு உள்ளதாக அறிக்கை மூலம் பகிரங்கப்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.