துணை ஜனாதிபதி தேர்தலில் பிஜு ஜனதா தளம் எதிர்க்கட்சிகள் வேட்பாளரை ஆதரிக்கிறது
துணை ஜனாதிபதி தேர்தலில் பிஜு ஜனதா தளம் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்திக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.
புவனேஷ்வர்,
இந்தியாவின் 14-வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். டெல்லியில் ஓட்டு எண்ணிக்கை 20-ந் தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது. அன்றே வெற்றி பெற்றவர் யார்? என்பது அறிவிக்கப்படுகிறது.
துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதியுடன் முடிவடைவதால் அவருக்கு பதிலாக புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க ஆகஸ்டு 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் கூட்டணியின் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். பாரதீய ஜனதா கூட்டணியின் சார்பில், துணை ஜனாதிபதி பதவிக்கு வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார். இருவரும் இன்று தங்களுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்து உள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளார் ராம்நாத் கோவிந்தை ஆதரித்த பிஜு ஜனதா தளம் துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் நிறுத்தி உள்ள கோபால கிருஷ்ண காந்தியை ஆதரிப்பதாக தெரிவித்து உள்ளது.
பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா முதல்-மந்திரியுமான நவீன் பாட்நாயக் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிஜு ஜனதா தளம் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்திக்கு ஆதரவு அளிக்கும் என்றார். அக்கட்சியின் செய்தித் தொடர்பாளார் காலிகேஷ் பேசுகையில், “காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவிடம் இருந்து தள்ளியிருக்கிறோம் என்பதை பாட்நாயக் அறிவிப்பு நிரூபனம் செய்து உள்ளது,” என்றார்.
கடந்த 2012-ம் ஆண்டு நவீன் பாட்நாயக் பேசுகையில், கோபால கிருஷ்ண காந்தி என்னுடைய பழைய மற்றும் மதிப்புமிக்க நண்பர் ஆவார். நான் அரசியலில் இல்லாத போதும் இருவரும் நண்பர்கள்தான் என கூறியிருந்தார்.