சிறந்த பேச்சாற்றல் மற்றும் அரசியல் அனுபவம் மிகுந்தவர் வெங்கையா நாயுடு வாழ்க்கை குறிப்பு
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து பா.ஜனதாவின் மூத்த தலைவர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தவர் ஆவார்.
புதுடெல்லி,
அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சவட்டபாலம் பகுதியில் 1949-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பிறந்த இவர், சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அதில் இருந்து தனது பொது வாழ்வை தொடங்கிய வெங்கையா நாயுடு, படிப்படியாக பா.ஜனதாவில் முன்னணி இடம் பிடித்தார். நெல்லூர் மாவட்டத்துக்கு உட்பட்ட உதயகிரி தொகுதியில் இருந்து 1978 மற்றும் 1983-ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மாநில அளவில் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
1998-ம் ஆண்டு கர்நாடகாவில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம் தேசிய அரசியலில் நுழைந்தார். பின்னர் 2004 மற்றும் 2010-ம் ஆண்டுகளிலும் மேல்-சபைக்கு தேர்வானார். தனது புன்சிரிப்பு, நகைச்சுவை மற்றும் அடுக்கு மொழியுடன் கூடிய உரையாற்றும் திறன் ஆகியவற்றால் 1996 முதல் 2000 வரை கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியை அலங்கரிக்கும் வாய்ப்பை பெற்றார்.
மற்ற தென்னக தலைவர்களைப்போல அல்லாமல் வெங்கையா நாயுடுவின் சரளமான இந்தி பேசும் திறன், தேசிய அளவில் அவருக்கு புகழையும், பெருமையையும் பெற்றுத்தந்தது. 1999-ல் வாஜ்பாய் தலைமையில் பா.ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற போது ஊரக நலத்துறை மந்திரியானார்.
தனது திறன்மிகுந்த செயல்பாடுகளால் கடந்த 2002-ம் ஆண்டு பா.ஜனதாவின் தேசிய தலைவராக வெங்கையா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2004-ல் மீண்டும் அந்த பொறுப்புக்கு ஒருமனதாக தேர்வானார். ஆனால் 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக வெங்கையா நாயுடு பதவியேற்றார். பின்னர் நடந்த மந்திரிசபை மாற்றத்தின் போது அவருக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை ஒதுக்கப்பட்டது.
சிறந்த பேச்சாற்றல் மற்றும் அரசியலில் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த இவர், கட்சியிலும் ஆட்சியிலும் மிக முக்கிய தலைவராக விளங்கி வந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இது மிகச்சிறந்த தேர்வு என்று கட்சியினர் கூறியுள்ளனர்.