நாகாலாந்து முதல்–மந்திரி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் மீண்டும் உத்தரவு

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 2013–ம் ஆண்டு முதல் நாகாலாந்து மக்கள் முன்னணியின் ஆட்சி நடந்து வருகிறது.

Update: 2017-07-14 23:15 GMT

கொகிமா

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 2013–ம் ஆண்டு முதல் நாகாலாந்து மக்கள் முன்னணியின் ஆட்சி நடந்து வருகிறது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முதல்–மந்திரியாக இருந்த ஜெலியாங் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 22–ந் தேதி புதிய முதல்வராக சுர்கோசெலி லீசீட்சு பதவியேற்றார்.

இந்தநிலையில் ஜெலியாங் தலைமையில் அக்கட்சியின் 45 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் ஒன்றாக திரண்டு லீசீட்சுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு இருப்பதால் என்னை முதல்–மந்திரியாக நியமிக்கவேண்டும் என்று அவர் கவர்னர் பி.பி.ஆச்சார்யாவுக்கு கோரிக்கை விடுத்தார். (மாநில சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 60 ஆகும்)

இதனால் கவர்னர் ஆச்சார்யா, சட்டசபையில் தனது பலத்தை லீசீட்சு நிரூபிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், இதற்கு மறுத்த அவர், இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றார். இந்த நிலையில் கவர்னர் மாளிகை அலுவலகம் நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் லீசுட்சு வருகிற 15–ந் தேதிக்குள் (இன்று) சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவேண்டும் என்று மீண்டும் உத்தரவிடப்பட்டு இருந்தது. இதனால் ஓட்டெடுப்பு விவகாரம் தொடர்பாக கவர்னர், முதல்–மந்திரி இடையே மோதல் முற்றி உள்ளது.

மேலும் செய்திகள்