காஷ்மீர் முழுவதும் கடும் உஷார் நிலை

அமர்நாத் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் கடும் உஷார் நிலையை மத்திய அரசு பிறப்பித்து உள்ளது.;

Update: 2017-07-12 23:15 GMT

புதுடெல்லி,

காஷ்மீரின் அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்து திரும்பிய பக்தர்கள் மீது கடந்த 10–ந் தேதி இரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். குஜராத்தைச் சேர்ந்த பக்தர்கள் சென்ற பஸ் மீது நடந்த இந்த தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு லஷ்கர்–இ–தொய்பா அமைப்பே காரணம் எனவும், அந்த அமைப்பின் தளபதியான பாகிஸ்தானை சேர்ந்த அபு இஸ்மாயில்தான் காரணம் என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து மாநிலத்தில் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆகிர், பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோர் காஷ்மீர் சென்றனர். அவர்கள் முதல்–மந்திரி மெகபூபா முப்தி, கவர்னர் என்.என்.வோரா, தலைமைச் செயலாளர் ஆகியோருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரின் உத்தரவின் பேரில் சென்றுள்ள இந்த மந்திரிகள், உள்ளூர் ராணுவ தளபதி, போலீஸ் டி.ஜி.பி., மத்திய ரிசர்வ் படை இயக்குனர், எல்லை பாதுகாப்பு படை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதித்தனர்.

பின்னர் இந்த மந்திரிகள் வழங்கிய பரிந்துரைகளின் பேரில் காஷ்மீர் மாநிலத்தில் கடும் உஷார் நிலையை மத்திய அரசு பிறப்பித்து உள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமர்நாத் யாத்ரீகர்கள் மீது சமீபத்தில் நடந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயத்தை கருத்தில் கொண்டு, காஷ்மீரில் உள்ள அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் கடும் உஷார் நிலையில் இருக்குமாறு மந்திரிகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்