உங்கள் பசு பாதுகாவலர்களை பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட செய்யலாமே சிவசேனா மீண்டும் தாக்கு

பா.ஜனதாவை மீண்டும் சீண்டி உள்ள சிவசேனா பசு பாதுகாலவர்களை பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட அனுப்பாதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2017-07-12 10:08 GMT

மும்பை,
 
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பஸ்சில் சென்ற பக்தர்கள் மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் இறந்தனர். 5 பக்தர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள், இருவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உளவுத்துறை தகவல்கள் கிடைக்கப்பெற்றும் இதுபோன்ற தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் பா.ஜனதாவின் நீண்ட நாள் கூட்டணி கட்சியான சிவசேனாவும் விமர்சனம் செய்து உள்ளது.

மராட்டியத்தில் விநாயகர் சதூர்த்தி விழா ஏற்பட்டாளர்கள் மத்தியில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இன்று பசு பாதுகாலவர்கள் விவகாரம் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீங்கள் இந்த பசு பாதுகாவலர்களை பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட அனுப்பாதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். “பாரதீய ஜனதா அரசியல் விவகாரங்களில் விளையாட்டு, கலாச்சாரத்தை இழுத்து வரமாட்டோம் என கூறுகிறது. இன்று பயங்கரவாத தாக்குதல் என்ற நிலையில் மதமும், அரசியல்களும் ஒன்றாகிஉள்ளது.

 தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பையில் துப்பாக்கி இல்லாமல் மாட்டிறைச்சி இருந்து இருந்தால் அவர்களில் ஒருவர் கூட உயிரோடு சென்றிருக்க முடியுமா என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்,” என பேசிஉள்ளார் உத்தவ் தாக்கரே. மராட்டியத்தில் விழா காலங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்பாட்டிற்கு மும்பை கோர்ட்டு கட்டுப்பாடு கொண்டு வந்து உள்ளதற்கு எதிராக அவசர சட்டத்தை பட்னாவிஸ் அரசு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் உத்தவ் தாக்கரே. பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை அடித்து கொல்வது இந்துத்வா கொள்கைக்கு எதிரானது என சிவசேனா கட்சி பத்திரிக்கையான சாம்னா ஏற்கனவே விமர்சனம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்