அமர்நாத் தாக்குதல் 50 பயணிகளை காப்பாற்றிய பஸ் டிரைவர் சலீம்

அமர்நாத் பக்தர்கள் மீது தீவிர்வாதிகள் நடத்திய தக்குதலில் இருந்து டிரைவர் சலீம் 50 பயணிகளை காப்பாற்றினார்.

Update: 2017-07-11 10:11 GMT
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் 3,388 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. இந்த குகைக்கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் அங்கு யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 29–ந்தேதி தொடங்கியது. கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு 8.20 மணி அளவில் அனந்தநாக் மாவட்டத்தில் பதான்கு என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் போலீசார் வந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு போலீசாரும் திருப்பி சுட்டனர். இதனால் பயங்கரவாதிகள் பின்வாங்கி ஓடினார்கள். அப்போது அந்த பாதையில், அமர்நாத் பக்தர்களின் பஸ் வந்தது. அவர்கள் அமர்நாத் சென்று பனி லிங்கத்தை தரிசித்து விட்டு பஸ்சில் திரும்பிக்கொண்டு இருந்தனர். அந்த பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் பஸ்சுக்குள் இருந்தவர்கள் அலறினார்கள். உடனே போலீசார் விரைந்து வந்து பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் குண்டு பாய்ந்து பலி ஆனார்கள். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். பலியான பக்தர்கள் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

 இந்த தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ராணுவ வீரர்களும், போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகளை அவர்கள் தேடி வருகிறார்கள். பாதுகாப்பு கருதி இரவு 7 மணிக்கு மேல் அந்த பாதையில் அமர்நாத் பக்தர்களின் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் டிரைவர் பஸ்சை ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி,  காஷ்மீர் மாநில கவர்னர் என்.என்.வோரா, முதல்–மந்திரி மெகபூபா முப்தி,உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்  ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த தாக்குதலின் முக்கிய மூளையாக   லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதி இஸ்மாயில் செயல்பட்டு உள்ளான் என காஷ்மீர்  ஐஜி முனிர்கான் தெரிவித்து உள்ளார்.

விஷ்வ இந்து பரிஷத் , ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய பேந்தர்ஸ் கட்சி, தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் அமைப்புகள் இன்று ஜம்முவில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

இந்த நிலையில்  தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து 50 பயணிகளை காப்பாற்றிய பஸ் டிரைவர் சலீமுக்கு பாராட்டுகள் குவிகின்றன.  சலீம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இரவு நேரத்தில் நடந்த தாக்குதல் நடந்ததால், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என தெரியவில்லை. இருப்பினும் பஸ்சை ஓட்டி வந்த சலீம் ஷேக் பயப்படாமல் பஸ்சை, சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி கொண்டு சென்று நிறுத்தினார். இதனால், பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து 50க்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டது. இதற்காக பலரும் அவரை பாராட்டினர்.

இது குறித்து சலீம்  கூறும் போது கடவுள்  பஸ்சை  நகர்த்துவதற்கான பலத்தை எனக்கு கொடுத்தார், நான் நிறுத்தவில்லை என கூறினார்.

பஸ்சில் பயணம் செய்த ஒருவர்  கூறுகையில், அனைத்து பகுதிகளில் இருந்து குண்டுகள் வர துவங்கியதும் நாங்கள் அனைவரும் பஸ்சின் இருக்கைக்கு அடியில் சென்று ஓளிந்து கொண்டோம். ஆனால், டிவைர் பயப்படாமல் பஸ்சை ஓட்டியதாக கூறினார்.

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபனி, சலீமின் செய்ல்கள் குறித்து பாராட்டினார்.  துணிசலுக்கான விருதுக்கு  அவர் பரிந்துரைக்கபடுவார் என கூறினார்.

மேலும் செய்திகள்