அமர்நாத் யாத்திரை தாக்குதல்; 15 வருட எழுதப்படாத விதியை உடைத்த பயங்கரவாதிகள்
காஷ்மீரில், அமர்நாத் பக்தர்கள் 7 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். 19 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் 3,388 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. இந்த குகைக்கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் அங்கு யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 29–ந்தேதி தொடங்கியது. கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு 8.20 மணி அளவில் அனந்தநாக் மாவட்டத்தில் பதான்கு என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் போலீசார் வந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு போலீசாரும் திருப்பி சுட்டனர். இதனால் பயங்கரவாதிகள் பின்வாங்கி ஓடினார்கள். அப்போது அந்த பாதையில், அமர்நாத் பக்தர்களின் பஸ் வந்தது. அவர்கள் அமர்நாத் சென்று பனி லிங்கத்தை தரிசித்து விட்டு பஸ்சில் திரும்பிக்கொண்டு இருந்தனர். அந்த பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் பஸ்சுக்குள் இருந்தவர்கள் அலறினார்கள். உடனே போலீசார் விரைந்து வந்து பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் குண்டு பாய்ந்து பலி ஆனார்கள். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். பலியான பக்தர்கள் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ராணுவ வீரர்களும், போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகளை அவர்கள் தேடி வருகிறார்கள். பாதுகாப்பு கருதி இரவு 7 மணிக்கு மேல் அந்த பாதையில் அமர்நாத் பக்தர்களின் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் டிரைவர் பஸ்சை ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அமர்நாத் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகுந்த வேதனை அளிப்பதாக கூறி உள்ள அவர், இந்த சம்பவம் குறித்து காஷ்மீர் மாநில கவர்னர் என்.என்.வோரா, முதல்–மந்திரி மெகபூபா முப்தியுடன் தான் பேசியதாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்ததாகவும் கூறி இருக்கிறார். இதுபோன்ற கோழைத்தனமாக தாக்குதல்களுக்கு இந்தியா பணிந்துவிடாது என்றும் அவர் கூறி உள்ளார்.
உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் முதல்–மந்திரி மெகபூபா முப்தி ஆகியோரும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், அமர்நாத் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டு இருக்கிறார்.
இதற்கு முன்னதாக அமர்நாத் யாத்திரையின் போது நடத்தப்பட்ட தாக்குதல்கள்:-
ஜூன் 21, 2006
ஸ்ரீநகரில் பஸ் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டதில் 10 பக்தர்கள் காயம் அடைந்தனர்.
2002 ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 8 பேர் பலியாகினர், 30 பேர் காயம் அடைந்தனர். நவுன்வான் முகாமில் அதிகாலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதே ஆண்டு ஜம்முவின் ரகுநாத் கோவிலில் இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை 30, 2002 அமர்நாத் யாத்திரைக்கு சென்ற கார் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியதில் இரு பக்தர்கள் உயிரிழந்தனர். மூவர் காயம் அடைந்தனர்.
ஜூலை 20, 2001
அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் தங்கியிருந்த முகாமின் மீது பயங்கரவாதிகள் இரு கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் மூன்று பெண்கள், இரு போலீசார் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதலை முன்னெடுத்தது.
ஆகஸ்ட் 1, 2000
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கம் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. பாகல்காமில் நடந்த இந்த தாக்குதலில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர். பலத்த பாதுகாப்புடன் யாத்திரை மீண்டும் தொடங்கியது.
15 ஆண்டுகளுக்கு பின்னர் பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து பயங்கர தாக்குதலை முன்னெடுத்து உள்ளனர். இதுவரையில் பக்தர்களை குறிவைத்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் தாக்குதலை நடத்தி வந்தது. இப்போது லஷ்கர் உதவி பெறும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சிஆர்பிஎப் உயர்மட்ட அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.