டோகா லா பகுதியில் ராணுவம் குவிப்பு எல்லையில் இருந்து ராணுவம் பின்வாங்காது என சீனாவிற்கு இந்தியா சூசகம்
இந்திய எல்லை பகுதியில் இருந்து ராணுவம் பின்வாங்காது என சீன அரசிற்கு இந்திய ராணுவம் சூசகமாக பதில் அளித்துள்ளது.
புதுடெல்லி,
சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, பூடான், சீனா ஆகியவற்றின் முச்சந்திப்பில் இந்திய மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. சிக்கிம் மாநில எல்லைக்குள் நுழைந்து சீன ராணுவம் இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்ததால் அங்கு ராணுவத்தை இந்தியா குவித்து உள்ளது.
சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் சீன ராணுவமும் படையை குவித்து இருக்கிறது. இதனால் சிக்கிம் மாநில எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் என சீன அரசு வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சீனா தெரிவித்து இருந்தது. சீன அரசின் அழுத்தத்துக்கு நாங்கள் அடிபணிய போவதில்லை என இந்திய ராணுவம் சூசகமாக தெரிவித்துள்ளது.
டோகா லா பகுதியை ஒட்டிய எல்லை பகுதியில் நீண்ட தூரத்துக்கு ராணுவ வீரர்களை இந்தியா தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. சீன ராணுவத்துடனான மோதல் முடிவுக்கு வரும் வரை இப்போதுள்ள நிலையைத் தொடர இந்தியா முடிவு செய்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது தொடர்பாக 2012-ல் ஒரு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை இரு நாடுகளிடையே எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.