டார்ஜிலிங்கில் மீண்டும் வன்முறை போலீஸ் நிலையம் முற்றுகை; கண்ணீர் புகை வீச்சு
தனி மாநிலம் கேட்டு தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் டார்ஜிலிங்கில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.;
டார்ஜிலிங்,
மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதியை தனி மாநிலமாக்க கோரி கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இதன் காரணமாக அங்கு இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
முழுஅடைப்பு போராட்டம் நடந்து வருவதால் மருந்துகடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தொண்டர் டாசி பூதியா (வயது 28) என்பவர் மருந்து வாங்க கடைக்கு சென்றார். அப்போது, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் நிலையம் முற்றுகை
ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் சோனாடா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மீது அவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். நிலைமை மோசமானதால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும், வன்முறையை கட்டுப்படுத்த ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இதனால் அனைவரும் சிதறி ஓடினர்.
அப்போது சிலர் அங்கிருந்த போக்குவரத்து சோதனைச்சாவடியை தீ வைத்து எரித்தனர். இதற்கிடையே பாதுகாப்பு படையினர் யாரையும் சுட்டுக்கொல்லவில்லை என்று அரசு மறுத்து உள்ளது.
இதுகுறித்து மாநில சுற்றுலாத்துறை மந்திரி கவுதம் தேவ் கூறுகையில், ‘கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சித்தொண்டரை யாரும் சுட்டுக்கொல்லவில்லை. அது எதிர்பாராமல் நடந்த இறப்பு. போலீசாரும், பாதுகாப்பு படையினரும் சட்டம்-ஒழுங்கை பராமரித்து வருகிறார்கள்’ என்று தெரிவித்தார்.