மேற்கு வங்கத்தில் மத கலவரம் ஏற்பட்ட பகுதிக்குள் பிரவேசிக்க முயற்சித்த அரசியல் கட்சியினர் தடுப்பு
மேற்கு வங்காளத்தில் மத கலவரம் ஏற்பட்ட பகுதிக்குள் பிரவேசிக்க முயற்சித்த அரசியல் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.;
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் படுரியா என்ற பகுதியில் கடந்த 3-ம் தேதி மாலை திடீரென இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. முகநூலில் ஹோலி தொடர்பான பக்கத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து ஒன்று வெளியானதால் இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆங்காங்கே தீவைப்பு சம்பவங்களும், மோதல்களும் ஏற்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த மாநில போலீசாருக்கு உதவியாக மத்தியில் இருந்து 3 கம்பெனி துணை ராணுவம் (300 வீரர்கள்) மேற்குவங்காளத்துக்கு அனுப்பப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் கவர்னர் திரிபாதியிடம் பேசினார். நிலையை கேட்டறிந்த அவர் மாநில அரசு அறிக்கையை தாக்கல் செய்ய கேட்டுக் கொண்டார். படுரியாவில் தொடர்ந்து பதட்டமான நிலையே நீடித்து வருகிறது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அப்பகுதியில் இன்டர்நெட் சேவையானது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையேயும் வன்முறை சம்பவங்கள் நேரிட்டது. தொடர்ந்து பதட்டமான நிலையே நீடித்துவரும் பகுதிக்கு செல்ல அரசியல் கட்சியினர் திட்டமிட்டனர்.
படுரியாவிற்கு செல்ல முயற்சித்த காங்கிரஸ், பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரிகள் கட்சியின் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட மூத்த அதிகாரி பேசுகையில், “படுரியா பகுதியில் தொடர்ந்து பதட்டமான நிலையே நீடிக்கிறது. நாங்கள் எந்தஒரு குழுவையும் அங்கு பிரவேசிக்க அனுமதிக்க மாட்டோம், இது மேலும் பிரச்சனையை உருவாக்கும்,” என கூறிஉள்ளார். இடதுசாரி கட்சியின் சட்டசபைத் தலைவர் சுஜன் சக்ராபோர்தி பேசுகையில்,
அசோக்நகர் பகுதியில் நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம், நாங்கள் அங்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறுகிறார்கள். நாங்கள் அரசியல் நிகழ்ச்சிக்காக அங்கு செல்லவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவே நாங்கள் செல்ல முயற்சித்தோம் என கூறிஉள்ளார். திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என கூறிஉள்ளார். இதேபோன்ற பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியின் குழுக்களும் தடுத்து நிறுத்தப்பட்டது. பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. ரூபா கங்குலி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.