செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய மீண்டும் அவகாசம் வழங்க பரிசீலனை
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந் தேதி இரவு ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.
புதுடெல்லி,
பண மதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்கு உத்தரவிட கோரி சுதா மிஸ்ரா என்பவர் மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:–செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதில் சிலருக்கு ஏதாவது சிக்கல் இருந்திருக்கலாம். அந்த நேரத்தில் அவரிடம் அந்த பணம் தொலைந்து போய் இருக்கலாம். அல்லது செல்லாத நோட்டுகளை வைத்திருந்தவர் அந்த நேரத்தில் சிறையில் கூட இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
இவர்கள் எல்லாம் பணத்தை மாற்றக்கூடாது என்கிறீர்களா?... கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை குப்பையில் போட்டு விடும்படி செய்துவிடாதீர்கள். இதுபோன்ற சிக்கல் உள்ளவர்களுக்கு பணத்தை டெபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்கலாம்.
டிசம்பர் 31–ந் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்வதில் தனக்கு சிக்கல்கள் இருந்ததாக யாராவது நிரூபித்தால் அவர்கள் மீண்டும் பழைய ரூ.500, 1,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய ஒரு வாய்ப்பு அளிக்கவேண்டும்.
இதற்காக சாளரம் ஒன்றை அமைக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பரிசீலனை செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், ‘‘செல்லாத ரூ.500, 1,000 நோட்டுகளை டெபாசிட் செய்யாமல் போன அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கவேண்டும் என உத்தரவிடவேண்டாம். அதே நேரம் அந்த ரூபாய் நோட்டுகளை இன்னும் வைத்திருப்பவர்களின் உண்மை நிலை குறித்து மத்திய அரசு பரிசீலிக்க தயாராக இருக்கிறது. சிக்கல் இருந்தவர்களுக்கு மட்டும் மத்திய அரசு சாளரம் ஒன்றை திறப்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. இதுபற்றி பதில் அளிக்க மத்திய அரசுக்கு அவகாசம் தேவை’’ என்று கேட்டுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து அடுத்த 2 வாரங்களுக்குள், இதுபற்றி விரிவான பதிலை மத்திய அரசு பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. மீண்டும் இந்த வழக்கு 18–ந் தேதி விசாரணைக்கு வருகிறது.