மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.;
இடாநகர்,
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கவுகாத்தியில் இருந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிரோ என்ற இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். மி-17 ரக ஹெலிகாப்டரில் கிரன் ரிஜிஜூவுடன் ஏழு பிற பயணிகளும் சிப்பந்திகளும் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு திடீரென வானிலை மோசமானது. கன மழையும் கடும் பனிமூட்டமும் இருந்ததால் ஹெலிகாப்டர் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், ஹெலிகாப்டர் இடாநகர் அருகே உள்ள திறந்த வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எல்லைப்பாதுகாப்பு படையைச்சேர்ந்த பைலட் உரிய நேரத்தில் ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்கியதால் அதிருஷ்டசமாக மத்திய மந்திரி உள்பட அனைவரும் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த கிரண் ரிஜிஜு, நான் மிகவும் அதிருஷ்டசாலி என கருதுகிறேன். பத்திரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. நல்ல அனுபவம் உள்ள பி.எஸ்.எப் பைலட்டிற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கிரண் ரிஜிஜூ வந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியானதும் இடாநகர் காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் வந்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். உள்ளூர் மக்களும் விரைந்து வந்து கிரண் ரிஜிஜூவுக்கு உதவ முன்வந்தனர்.