ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குறித்து மோடி உருக்கம் ‘‘தந்தையை போன்று எனது நலனில் அக்கறை கொண்டவர்’’
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒரு தந்தையை போன்று எனது நலனில் அக்கறை கொண்டவர் என்று மோடி கூறினார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி மாளிகையில், ‘பிரசிடண்ட் பிரணாப் முகர்ஜி–ஏ ஸ்டேட்ஸ்மேன்’ என்ற புத்தகம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, புத்தகத்தை வெளியிட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
பிரணாப் முகர்ஜி இன்னும் சில நாட்களில் ஓய்வுபெற உள்ளதால், இந்நிகழ்ச்சியில் அவர் மீதான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் மோடி பேசினார்.
மோடி பேசியதாவது:–
தந்தையை போல...ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒரு தந்தை தன்னுடைய மகன் மீது பாசம் காட்டுவது போல், என்னை கவனித்தார். அவர் என்னை பார்த்து சொல்வார். ‘மோடிஜி, அரை நாளாவது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். ஏன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறீர்கள்? நிகழ்ச்சிகளை குறைத்துக் கொள்ளுங்கள். உடல்நலனை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்பார்.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின்போது, ‘வெற்றி தோல்வி வரும் போகும். உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டாமா?’ என்று பிரணாப் முகர்ஜி கேட்டார். இவையெல்லாம் ஒரு ஜனாதிபதியின் கடமை அல்ல. இருப்பினும், அவருக்குள் இருக்கும் மனிதர், அப்படி செய்ய வைக்கிறார்.
பிரணாப் முகர்ஜி, பிறருக்கு உந்துசக்தியாக திகழ்பவர். வெளிநாட்டு பிரதிநிதிகள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், அவர்கள் முன்பு ஜனாதிபதி தன்னம்பிக்கையுடன் தோன்றுவார்.
இவ்வாறு மோடி பேசினார்.
ஜனாதிபதி பேச்சுநிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில், மோடி பற்றி உயர்வாக குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:–
மோடியும், நானும் வெவ்வேறு கருத்துகளை கொண்டவர்களாக இருந்தாலும், அது ஜனாதிபதி–பிரதமர் உறவை பாதிக்கவில்லை. இந்த அரசு, தனது செயல்பாட்டை ஒருபோதும் நிறுத்தியது இல்லை. ஒருபோதும் தாமதம் செய்தது இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.