இந்திய பெற்றோர்கள் குழந்தையின் படிப்பிற்கு ரூ. 12.22 லட்சம் செலவு செய்கிறார்கள்

இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் படிப்பிற்கு ரூ. 12.22 லட்சம் செலவு செய்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.

Update: 2017-07-02 06:21 GMT

மும்பை,

இந்திய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் தொடக்க கல்வி முதல் இளங்கலை பட்டம் வரையில் சராசரியாக 18,909 அமெரிக்க டாலர்கள் (ரூ. 12.22 லட்சம்) வரையில் செலவு செய்கிறார்கள், இது உலக சராசரி 44,221 அமெரிக்க டாலரைவிட (ரூ. 29 லட்சம்) குறைவானது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எச்எஸ்பிசி நடத்திய கல்வி மதிப்பு என்ற தலைப்பிலான ஆய்வில், “இந்திய பெற்றோர்கள் குழந்தையின் படிப்பு செலவிற்கு (பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தின் கண்டனம், புத்தகங்கள், போக்குவரத்து மற்றும் தங்கும் வசதி உள்பட) ரூ. 12.12 லட்சம் வரையில் செலவு செய்கிறார்கள்,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஹாங்காங்கில் பெற்றோர்கள் குழந்தையின் படிப்பு செலவிற்கு 85 லட்சம் ரூபாய் வரையில் செலவு செய்கிறார்கள். இதற்கு அடுத்தப்படியாக ஐக்கிய அரபு எமிரெட்ஸில் பெற்றோர்கள் 64 லட்சம் ரூபாய் வரையிலும், சிங்கப்பூரில் 46 லட்சம் ரூபாய் வரையிலும் செலவு செய்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்து உள்ளது. ஆய்வானது 15 நாடுகளை சேர்ந்த 8,481 பெற்றோர்களின் கருத்துக்களை கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஹாங்கான், இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, மெக்சிகோ, சிங்கப்பூர், தைவான், ஐக்கிய அரபு எமிரெட்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த 15 நாடுகளில் இந்தியா 13வது இடத்தை பிடித்து உள்ளது. அடுத்த இடத்தை எகிப்து பிடித்து உள்ளது. கடைசி இடத்தை பிரான்ஸ் பிடித்து உள்ளது. பிரான்ஸ் நாட்டில் பெற்றோர்கள் குழந்தையை படிக்க வைக்க ஆகும் செலவானது 10 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எச்எஸ்பிசியின் இந்திய தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன் பேசுகையில், உலக வேலைவாய்ப்பு தொடர்பான இன்றைய போட்டி சந்தையில் கல்வியானது மிகவும் முக்கியமானது. பெற்றோர்கள் இதனை பாராட்டுகிறார்கள், அவர்கள் கல்விக்கு பணத்தை செலவு செய்ய விரும்புகிறார்கள், குழந்தைகள் சிறப்பாக வாழ்க்கையினை தொடங்க பணமானது உதவும். குழந்தையின் கல்விக்காக பெற்றோர்கள் காட்டும் ஆதரவானது அவர்களுடைய தனிப்பட்ட, வாழ்க்கை முறை மற்றும் நிதி தியாகங்களை காட்டுகிறது என்றார். 

மேலும் செய்திகள்